தமிழ்நாடு

சட்டம்-ஒழுங்கு பிரச்னையா?: புள்ளி விவரங்களை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின்

"அன்றாட நிகழ்வாக கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒரேநாளில் மொத்தம் 4 கொலைகள் நடந்துள்ளன" - இபிஎஸ்

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகத் தொடர்ந்து விமர்சனங்கள் வரும் நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் திருநெல்வேலியில் முன்னாள் காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. இதற்கு மத்தியில், ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் ஜான் என்பவர் நேற்று படுகொலை செய்யப்பட்டார். ஜாகிர் உசேன் கொலை மற்றும் ஜான் கொலையில் தொடர்புடையவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை விவாதத்துக்குள்ளானது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துப் பேசுகையில், "அன்றாட நிகழ்வாக கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒரேநாளில் மொத்தம் 4 கொலைகள் நடந்துள்ளன" என்றார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் புள்ளி விவரங்களை அடுக்கினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் உரை:

"நேற்று நான்கு கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். கோவை சம்பவம் முதற்கட்டமாக தற்கொலை எனத் தெரியவந்துள்ளது. மதுரை சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிவகங்கை கொலை குறித்து விசாரித்ததில் குடும்பத் தகராறு எனத் தெரியவந்துள்ளது.

ஈரோடு சம்பவம் குறித்து விரிவாக சொல்ல விரும்புகிறேன். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜான் என்கிற சாணக்யன் என்பவர் உயர் நீதிமன்றத்தின் நிபந்தனை பிணையின் அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு தனது மனைவியோடு காரில் திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, பின்னாள் காரில் சென்ற அடையாளம் தெரியாத சிலர் இருவரையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். காயமடைந்த சாணக்யன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவருடைய மனைவி சித்தோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு இதுதொடர்புடைய சரவணன், சதீஷ், பூபாலன் மற்றும் மைனா கார்த்திக் ஆகியோரை பச்சப்பாளையம் என்கிற இடத்தில் அவர்களுடைய காரை மறித்து கைது செய்ய முயற்சித்தார்கள். அப்போது காவல் துறையினரைத் தாக்கினார்கள். இதனால் சித்தோடு காவல் ஆய்வாளர் பாதுகாப்புக்காக அவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதில் மூன்று பேருக்குக் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக முதலில் பெருந்துறை மருத்துவமனையிலும் பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இது பழிவாங்கும் நோக்கத்தில் நடந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து சில கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இதுகுறித்து புள்ளி விவரங்களை வெளியிட விரும்புகிறேன்.

கடந்த 2024-ல் மட்டும் 4,572 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக 2023-ல் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் 49,280 ஆக இருந்தது. 2024-ல் இது 31,497 ஆகக் குறைந்துள்ளது.

ஒரே ஆண்டில் 17,782 குற்றங்களைக் குறைத்துள்ளோம். சில கொலைக் குற்றங்கள் நடைபெறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவரும்போது அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

உண்மையில் எண்ணிக்கையைப் பார்க்கும்போது 2024-ல் கொலைக் குற்றங்கள் 6.8% குறைந்துள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 109 கொலைகள் குறைந்துள்ளன. அதேபோல் பழிக்குப் பழி வாங்கும் கொலைகளின் எண்ணிக்கையும் 2024-ல் 42.72% குறைந்துள்ளது.

2023-ல் 103 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை வாங்கித் தரப்பட்டுள்ளது. 2024-ல் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கித் தரப்பட்டுள்ளது. 2024-ல் மட்டும் 150 சரித்திர பதிவேடு ரௌடிகளும் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகளுக்கு மேல் கடுங்காவல் தண்டனை, நீதிமன்றங்கள் மூலம் பெறப்பட்டுள்ளன.

இறுதியாக, கடந்த 2012 முதல் 2024-ம் ஆண்டுக்கான நிகழ்ந்த கொலைகள் எண்ணிக்கையை ஆண்டுவாரியாக ஒப்பிட்டுப் பார்க்கையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் 2012-ல் நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,943. கடந்த 12 ஆண்டுகளில் இதுதான் மிக அதிகமான எண்ணிக்கை. 2013-ல் நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,927. கொரோனா காலத்திலும் பொதுமுடக்கத்தில் இருந்தபோதிலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2020-ம் ஆண்டில் நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,661.

திமுக ஆட்சியில் காவல் துறையினர் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கையால் கடந்த 12 ஆண்டுகளில் 2022-ல் தான் மிகமிக குறைவான எண்ணிக்கையில், அதாவது 1,540 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.

தைரியம் இருந்தால் என் பதிலைக் கேட்டுவிட்டு அதிமுகவினர் வெளியே செல்லட்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.