தமிழ்நாடு

வீம்புக்குச் செய்வது...: இபிஎஸ் குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

"இதற்குப் பதில் சொல்லி என் தரத்தைத் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை."

கிழக்கு நியூஸ்

திமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் கிடைக்காததால், தில்லி பயணத்தை வைத்து பேசுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் தனது சொந்த தொகுதியில் நிறைவுற்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

"இந்த ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால், திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைப்பதுபோல அரைத்துக்கொண்டிருக்கிறார். இதற்குத் திரும்பத் திரும்ப பதில் சொல்லத் தயாராக இல்லை. இதற்குப் பதில் சொல்லி என் தரத்தைத் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.

நான் வெள்ளக்கொடியுடன் தில்லி செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். தில்லிக்கு வெள்ளக்கொடியையும் எடுத்துச் செல்லவில்லை, காவிக்கொடியையும் எடுத்துச் செல்லவில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டேன்" என்றார் மு.க. ஸ்டாலின்.

அரக்கோணம் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி இன்று வைத்த விமர்சனம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கையில், "அதெல்லாம் கொள்ளையடித்த ஆட்சி. ஏற்கெனவே சாத்தான்குளம், தூத்துக்குடி எனப் பல்வேறு சம்பவங்கள் உள்ளன. இதை எடுத்துக் கூறிக்கொண்டிருந்தால், நேரம் போதாது. இதெல்லாம் வீம்புக்குச் செய்வது" என்றார் மு.க. ஸ்டாலின்.

முன்னதாக, "ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும் மறைக்கப்பட்டு- காக்கப்படுகிறதா? அப்படியெனில், யார் அந்த சார்? இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து!" என திமுக அரசை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.