படம்: TNDIPR
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்

கிழக்கு நியூஸ்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.

இந்தப் பேருந்து நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் இயங்கும்போது பண்டிகை காலங்களில் நகரில், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை புறநகரை சென்றடையே பல மணி நேரங்கள் எடுப்பது வழக்கமாக உள்ளது. இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளன. பொங்கல் வரவுள்ள நிலையில், இதற்கு முன்னதாக இந்தப் பேருந்து நிலையமானது இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், சேகர் பாபு, எஸ்.எஸ். சிவசங்கர், மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சென்னை மேயர் பிரியா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். இதன்பிறகு, பேருந்து நிலையத்தை முதல்வர் பார்வையிட்டார். தொடர்ந்து கொடியசைத்து பேருந்து போக்குவரத்தைத் தொடக்கிவைத்தார்.

இந்தப் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து ஒருநாளைக்கு 2,310 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் முக்கிய அம்சங்கள்:

  • மொத்த பரப்பளவு - 88.52 ஏக்கர்

  • கட்டடத்தின் மொத்த பரப்பளவு - 6,50,696 சதுர அடி

  • மருத்துவமனை - 1

  • உணவகங்கள் - 4

  • கடைகள் - 100

  • கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிட வசதிகள்: 540

  • முழுப் பயன்பாட்டின்போது ஒருநாளைக்கு 1 லட்சம் மக்கள் பயணிக்கலாம்

  • 6 ஏக்கர் நிலப்பரப்பில் எழில்மிகு பூங்கா