தமிழ்நாடு

100 புதிய அரசுப் பேருந்துகள்: முதல்வர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்

கிழக்கு நியூஸ்

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக புதிதாகக் கொள்முதல் செய்யப்பட்ட 100 பிஎஸ்6 ரக பேருந்துகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ. 634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,666 பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 40 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 40 புதிய பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 10 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 5 புதிய பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 5 புதிய பேருந்துகளும் என மொத்தம் 100 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். மீதமுள்ள பேருந்துகள் அடுத்த இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.