தமிழ்நாடு

தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை

தேர்தல் பறக்கும் படையால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நெல்லை விரைவு ரயிலில் பயணித்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோரிடம் இருந்து ரூ. 4 கோடி கைப்பற்றப்பட்டது

ராம் அப்பண்ணசாமி

18-வது மக்களவைத் தேர்தல் பரப்புரை நடந்து கொண்டிருந்தபோது, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் இன்று (ஜூலை 11) விசாரணை நடத்தப்பட்டது.

எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நடந்த விசாரணைக்கு காலை 10.30 மணி அளவில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜரானார். அவரிடம் டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

18-வது மக்களவைத் தேர்தல் பரப்புரை நடந்த சமயத்தில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் பறக்கும் படையினரால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நெல்லை விரைவு ரயிலில் பயணித்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோரிடம் இருந்து ரூ. 4 கோடி கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது தமிழக காவல்துறை.

பின்பு இந்த வழக்கு விசாரணை தமிழக சிபிசிஐடி-யிடம் மாற்றப்பட்டது. நெல்லை விரைவு ரயிலில் கைப்பற்றப்பட்ட பணம் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று குற்றச்சாட்டு கிளம்பியது. இதனால் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 15 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜரான எஸ்.ஆர்.சேகரிடம் இந்த ரூ. 4 கோடி பணம் கைது செய்யப்பட்ட நபர்களிடம் எப்படி சென்றது என்ற கோணத்திலும், இது கட்சி தொடர்பான பணமாக இருக்கக்கூடுமா என்ற கோணத்திலும் 2 மணி நேரத்துக்கும் மேலாக சிபிசிஐடி துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரத்தில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் இன்னும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.