ANI
தமிழ்நாடு

அரசியலமைப்புச் சட்டம் மீது மோடிக்கு மரியாதை இல்லையா?: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

"சந்தர்ப்பவாதிகள், வாரிசு அரசியல் மற்றும் ஊழல்வாதிகளின் கூடாரமாகத் திகழும் இண்டியா கூட்டணியால், தேர்தலில் பாஜக தனித்துப் பெற்ற வெற்றியைக்கூட பெற முடியவில்லை."

கிழக்கு நியூஸ்

குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே அரசியலமைப்புச் சட்டம் மீது பிரதமர் மோடிக்கு மரியாதை இருப்பதை நினைவுபடுத்த வேண்டியது என் கடமை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"நிர்வாகம் மற்றும் ஆட்சித் தோல்வியை மறைப்பதற்காக மக்கள் நலன் சாராத விவகாரங்களைக் கொண்டு விழா எடுப்பது திமுகவின் வழக்கம். அப்படியான ஒரு விழாவில்தான், இண்டியா கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளைப் போல பாஜகவுக்கு எதிராக தார்மீகமான வெற்றியைப் பெற்றிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதிலிருந்தே அரசியலமைப்புச் சட்டம் மீதுள்ள தனது உயரிய மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் பற்றிய நினைவு பிரதமர் மோடிக்கு தற்போதுதான் வந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் கூறுவதற்கு நேர்மாறானது இது.

இண்டியா கூட்டணி, அரசியலமைப்புச் சட்டத்தின் முன்பு பிரதமர் மோடியைத் தலைவணங்கச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, மோடியின் வாழ்க்கை மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அவருக்கு இருக்கும் மரியாதையை நினைவுபடுத்த வேண்டியது என்னுடையக் கடமை. ஆட்சியில் எப்போது இருந்தாலும், காலில் போட்டு மிதிக்கக் கூடிய அளவுக்கு அரசியலமைப்புச் சட்டம் என்பது இண்டியா கூட்டணியினருக்குதான் வெறும் காகிதம்.

சந்தர்ப்பவாதிகள், வாரிசு அரசியல் மற்றும் ஊழல்வாதிகளின் கூடாரமாகத் திகழும் இண்டியா கூட்டணியால், தேர்தலில் பாஜக தனித்துப் பெற்ற வெற்றியைக்கூட பெற முடியவில்லை. தார்மீகமான வெற்றி என்கிற உலகத்தில் முதல்வர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

விழாக்களைக் கொண்டாட புதிய காரணங்களைத் தேடுவதைக் காட்டிலும், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற துளியாவது ஆர்வம் காட்டியிருந்தால், தமிழ்நாடு மேம்பட்டிருக்கும்" என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் மோடி வணங்கும் புகைப்படங்களைச் சேர்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.