சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை 
தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவு: முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் | TN Assembly |

பகுதி நேர ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்களுக்குப் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்...

கிழக்கு நியூஸ்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

2026-க்கான தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் பதிலுரை வழங்கினார். அதன் பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதிய அறிவிப்புகள்

  • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 லட்சம் வீடுகள் உருவாகி இருக்கும் நிலையில், மேலும் புதிதாக ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

  • முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 8,911 கோடி மதிப்பில் 20,484 கி.மீட்டர் நீளம் உள்ள கிராமச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் புதிதாக ரூ. 1,088 கோடி மதிப்பீட்டில் சுமார் 2,200 கி.மீட்டர் கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும்.

  • உங்களுக்காக ஸ்டாலின் திட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 1.80 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கான விழா தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 4 அன்று நடைபெறும்.

  • சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 2,000 -லிருந்து ரூ. 3,400 ஆகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

  • குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு சமையல் உதவியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ. 3,200 ஆகவும், அவர்களுக்கு பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டு மொத்தத் தொகை ரூ. ஒரு லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

  • சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் இறந்து விட்டால், குடும்ப ஓய்வூதியமாக ரூ. 1,200, மேலும் சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்து விட்டால், அவர்களுக்கான குடும்ப ஓய்வூதியமாக ரூ. 1000 வழங்கப்படும்.

  • சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் மேற்குறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக ரூ. 20,000 வழங்கப்படும்.

  • அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில், பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்குச் சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

சட்டப்பேரவை ஒத்திவைப்பு

இறுதியாக தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறி முதலமைச்சர் உரையை நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுற்றதை அடுத்து தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Speaker Appavu announced that the Tamil Nadu Legislative Assembly will be adjourned indefinitely.