தமிழ்நாடு

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை பயன்படுத்த டி.எம். கிருஷ்ணாவுக்குத் தடை!

வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், இந்து குழுமம் வழங்கும் பண முடிப்பை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் வழங்க தடைவிதித்தார்.

ராம் அப்பண்ணசாமி

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம். கிருஷ்ணா பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் வருடம்தோறும் ஒரு இசைக் கலைஞர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்குத் தங்கப்பதக்கத்துடன் கூடிய `சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுகிறது. இந்த சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நபருக்கு `இந்து குழுமம்’ சார்பில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் ரூ. 1 லட்சத்திற்கான பணமுடிப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 17 மார்ச் 2024-ல் பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார் மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி.

இதனைத் தொடர்ந்து, எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளை தெரிவித்து வரும் டி.எம். கிருஷ்ணாவுக்கு, அவரது பெயரில் வழங்கப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி விருதை வழங்கத் தடை விதிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடைவிதித்தார். இதனைத் தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மியூசிக் அகாடமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது எஸ்.எஸ். சுந்தர், பி. தனபால் ஆகியோரைக் கொண்ட இரு நீதிபதி அமர்வு.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடையில்லை என உத்தரவிட்டு, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள். இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சீனிவாசன்.

வழக்கு விசாரணையின் முடிவில், எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை பெற்றவர் என டி.எம். கிருஷ்ணா அடையாளப் பயன்படுத்தக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.