தமிழ்நாடு

திருவள்ளூர் சிறுமி வழக்கு: நீதி கோரி மக்கள், அதிமுக போராட்டம் | Tiruvallur

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார்.

கிழக்கு நியூஸ்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாததால், அப்பகுதி மக்கள் மற்றும் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கடந்த ஜூலை 12 அன்று பள்ளியிலிருந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி இளைஞர் ஒருவரால் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

அச்சிறுமி அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பி, தனது பாட்டியிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். முதலில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கூடுதல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியைக் கடத்திச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவான நிலையில், இது இணையத்தில் பெரிதளவில் பகிரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை சார்பில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக வழக்கில் தொடர்புடைய இளைஞரின் புகைப்படம் இன்று வெளியிடப்பட்டன. வழக்கு தொடர்பாக சிசிடிவி காட்சிகள் இருந்தும்கூட 8 நாள்களாக குற்றவாளி இன்னும் கண்டறியப்படாததற்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

அதிமுக சார்பில் ஆரம்பாக்கம் காவல் நிலையம் அருகே இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக மாவட்டச் செயலாளர் பலராமன் தலைமையில் அக்கட்சியினர் சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.

குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தி, திருவள்ளூர் பகுதி மக்கள் மற்றும் அதிமுகவினர் காவல் நிலையத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டார்கள். மேலும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், பெண்கள் சிலர் சாலை மாறியலிலும் ஈடுபட்டார்கள். காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். கடந்த 8 நாள்களாக சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மனநல ஆலோசனைகளும் சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளன.