சித்தரிப்புப் படம் 
தமிழ்நாடு

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: வெளியான கைதானவர் விவரங்கள்! | Tiruvallur

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் வைத்து கைதான நபருக்கு இன்று (ஜூலை 26) மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ராம் அப்பண்ணசாமி

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநிலத்தைச் சேர்ந்த நபருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவரிடம் தொடர்ச்சியான விசாரணையில் காவல்துறை ஈடுபட்டு வந்த நிலையில், அந்த நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதியான ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த ஜூலை 12 அன்று நண்பகல் 1 மணியளவில் தனது பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக அங்கிருந்த ரயில் பாதையைக் கடந்து தன்னந்தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது சிறுமியை பின்தொடர்ந்து ஒரு மர்ம நபர் சென்றுள்ளார். அந்த சமயம் அங்கே ஆள் நடமாட்டம் இல்லாததை ஒட்டி சிறுமியை பலவந்தமாக அருகிலிருந்த மாந்தோப்பிற்கு தூக்கி சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட அந்த மர்ம நபர் முயற்சித்துள்ளார்.

சுதாரித்துக்கொண்ட சிறுமி, அந்த மர்ம நபரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு அங்கிருந்து தப்பித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு தனக்கு நேர்ந்தது குறித்து பாட்டியிடம் சிறுமி தெரிவித்தததை அடுத்து, அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். காவல்துறை விசாரணையில் சிறுமியை மர்ம நபர் தூக்கிச் செல்லும் காட்சி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலிருந்த சிசிடிவியில் பதிவானது கண்டறியப்பட்டது.

ஆனால் மர்ம நபரை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளரிடம் சிறுமியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

சம்பவம் நடைபெற்று 10 நாள்களுக்கு மேலாகியும் குற்றவாளி கண்டறியப்படாததால், சிறுமியின் உறவினர்கள் அதிருப்தியடைந்து காவல்துறைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20-க்கும் மேற்பட்ட தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், குற்றவாளி குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரயில் நிலையம் அருகே வைத்து ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த வாலிபர்தான் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் என்பதை பாதிக்கப்பட்ட சிறுமி உறுதி செய்ததாக தகவல் வெளியானது.

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் வைத்து அந்த வாலிபருக்கு இன்று (ஜூலை 26) மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அந்த நபர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.