தமிழ்நாடு

திருநெல்வேலி பேராசிரியைக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது!

ஆண்-பெண் உறவுச் சிக்கல்கள், சமுதாயத்தில் நிலவும் பாலின சமத்துவமின்மை, பெண்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் போன்றவற்றை இந்த நூலில் பதிவுசெய்துள்ளார் நளினி ஜமீலா.

ராம் அப்பண்ணசாமி

`எண்ட ஆண்கள்’ மலையாள நூலை தமிழுக்கு மொழிபெயர்த்த திருநெல்வேலி பேராசிரியை விமலாவுக்கு தமிழ் பிரிவில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல எழுத்தாளரும், பெண் பாலியல் தொழிலாளிகளின் உரிமைக்காக குரல்கொடுப்பவருமான நளினி ஜமீலாவின் வாழ்க்கை அனுபவங்களை ஆவணப்படுத்தியுள்ளது மலையாள மொழியில் வெளியான `எண்ட ஆண்கள்’ நூல்.

ஆண்-பெண் உறவுச் சிக்கல்கள், சமுதாயத்தில் நிலவும் பாலின சமத்துவமின்மை, பெண்கள் உரிமை மற்றும் அவர்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் போன்ற பலவற்றையும் குறித்து இந்த நூலில் பதிவுசெய்துள்ளார் நளினி ஜமீலா.

திருநெல்வேலியில் உள்ள தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த்துறையைச் சேர்ந்த பேராசிரியை பா. விமலா, இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தார். `எனது ஆண்கள்’ என்ற பெயரில் தலைப்பிடப்பட்ட இந்த தமிழ் மொழிபெயர்ப்பை காலச்சுவடு வெளியிட்டது.

மலையாள நூலில் பிரதிபலிக்கப்பட்டுள்ள உணர்வுகளை தமிழ் வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில், மிகவும் நேர்த்தியான முறையில் அவர் மொழிபெயர்த்திருந்தார். இதன் அடிப்படையில், 2024-ம் ஆண்டின் தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு பா. விமலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.