தமிழ்நாடு

சென்னை சர்வதேச புத்தகக் காட்சியில் மூன்று மடங்கு உயர்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 64 நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன.

ராம் அப்பண்ணசாமி

2023-ம் ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பாண்டு சென்னை சர்வதேச புத்தகக் காட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் படைப்புகளை உலக அளவில் பல்வேறு மொழிகளுக்குக் கொண்டு செல்லவும், உலகளவில் பல்வேறு மொழிகளில் உள்ள சிறந்த படைப்புகளை தமிழுக்குக் கொண்டுவரும் நோக்கிலும், கடந்த 2023-ல் தமிழக அரசால் முதல்முறையாக சென்னை சர்வதேச புத்தகக் காட்சி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜனவரி 16-ல், 3-வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இதில் பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 64 நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன.

2023 சென்னை சர்வதேச புத்தகக் காட்சியில் 24 நாடுகள் பங்கேற்று, 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2024 புத்தகக் காட்சியில் 45 நாடுகள் கலந்துகொண்டு, 750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில், நடப்பு 2025 சர்வதேச புத்தகக் காட்சியில் 1125 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழில் இருந்து வெளிநாட்டு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு மேற்கொள்ளும் வகையில் 1005 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், வெளிநாட்டு மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு மேற்கொள்ளும் வகையில் 120 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இதனால் 2023-ம் ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பாண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளன.