மாதிரி படம் 
தமிழ்நாடு

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு!

கிழக்கு நியூஸ்

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தார்கள்.

புதுச்சேரி ரெட்டியார்பளையம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த செந்தாமரை (72) என்பவர், வீட்டு கழிப்பறைக்குச் சென்றபோது மயங்கி கீழே விழுந்தார். இவரைக் காப்பாற்ற முயன்று மகள் காமாட்சி மற்றும் பேத்தி பாக்கியலட்சுமி ஆகியோரும் மயங்கினார்கள். இதில் செந்தாமரை மற்றும் காமாட்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

பாக்கியலட்சுமிக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதேபகுதியைச் சேர்ந்த செல்வராணி என்ற சிறுமியும் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தப் பகுதியின் கழிவுநீர் வடிகாலிலிருந்து விஷவாயு கசிந்ததா என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், கழிவுநீர் வடிகாலிலிருந்துதான் விஷ வாயு கசிந்தது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியானது. இந்தச் சம்பவம் ரெட்டியார்பாளையம் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியதையடுத்து, அரசு நிர்வாகம் அப்பகுதியிலிருந்த மக்களை முதற்கட்டமாக வெளியேற்றியது. வீடுவீடாகச் சென்று முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், சமீபத்திய உத்தரவாக ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் யாரும் வீட்டில் சமைக்கக் கூடாது என புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

விவரம் அறிந்து முதல்வர் ரங்கசாமி ரெட்டியார்பாளையம் சென்று ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, "விஷவாயு பரவுவதைத் தடுக்க, ரெட்டியார்பாளையம் மட்டுமின்றி, புதுச்சேரி முழுக்க ஆய்வு செய்யப்படும். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சமும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூவரும் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.