புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என நினைக்கின்றனர், திமுக வளர்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என பேசியுள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த விழாவில் இன்று (நவ.4) கலந்துகொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு,
`நான் பேருரை ஆற்ற வரவில்லை நன்றியுரை ஆற்றவே வந்திருக்கிறேன். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் நிகழ்ச்சி என்றாலே எனக்கு உற்சாகம் வந்துவிடும். இங்கு படிக்கும் மாணவ மாணவியரைப் பார்க்கும்போது எனக்குத் தானாக உத்வேகம் வந்துவிடும். 2017-ல் சகோதரி அனிதா தற்கொலை செய்தபோது நாம் அனைவரும் வேதனைக்கு ஆளானோம்.
அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நீட் தேர்வு அவரது கனவை சிதைத்து, உயிரையும் பறித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்விக் கனவை சிதைக்கின்ற நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது. நீட்டுக்கு எதிரான தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் ஒரு நாள் மத்திய அரசு பணியும்.
அனிதாவின் நினைவாக முன்னேறத் துடிக்கின்ற இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில், அதற்கான முதல் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பயிற்சி மையமாக 2019-ல் கொளத்தூர் தொகுதியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்பட்டது. இங்கு இதுவரை 974 பெண்களும், 538 ஆண்களும் டாலி (tally) பயிற்சியை நிறைவுசெய்து இலவச லேப்டாப் பெற்றிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஜகந்நாதன் சாலையில் முதல்வர் படைப்பகத்தை திறந்துவைத்தேன். இதில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான கற்றல் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தபோது கூட சாலையில் மழைநீர் தேங்கவில்லை.
சில ஊடகங்கள் கடந்த வருடம் மழைநீர் தேங்கியிருந்த புகைப்படங்களைக் காண்பித்து, ஒரு மழைக்கே தண்ணீர் தேங்கியிருக்கிறது என குற்றம்சாட்டின. திமுக வளர்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என நினைக்கின்றனர்.
இதற்கு அண்ணா கூறுவதைப் போல வாழ்க வசவாளர்கள் என்றுதான் நான் கூற முடியும். மக்களுக்கு நன்மை செய்வதே எங்களுக்கு முக்கியம். தேவையில்லாமல் எல்லோருக்கும் நாங்கள் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை’ என்றார்.