படம்: https://x.com/mkstalin
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம்: ஸ்டாலின்

"அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும். காவல் துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்."

கிழக்கு நியூஸ்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், இது அனைவருக்குமான அனைவரையும் அரவணைக்கும் அரசு எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்பதால், இந்தக் கொலை சம்பவம் நாடு முழுக்க கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்தன.

இவற்றின் எதிரொலியாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் மாற்றப்பட்டு, புதிய ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் - ஒழுங்கு) டேவிட்சன் தேவாசிர்வாதம், ஆவடி காவல் ஆணையர் சங்கர், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

இந்த நிலையில், இது அனைவருக்குமான அரசு என முதல்வர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.

இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து திமுக அரசு நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பிய இயக்குநர் பா. இரஞ்சித் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? என்று குறிப்பிட்டிருந்தார்.