கூட்டணிக்குக் கூட நம்பத் தகுந்த கட்சி இல்லையா அதிமுக என்ற சந்தேகம் எழுவதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் கடந்த அக்டோபர் 8 அன்று நடந்த அதிமுக பரப்புரையின்போது தவெக கொடி காட்டப்பட்டது. இதைக் கண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தவெகவின் கூட்டணிக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது என்று பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து பாஜகவைக் கழற்றிவிட்டுவிட்டு விஜயின் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“அதிமுகவுடன் விஜய் இணைந்தால் திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பது அதிமுக தரப்பில் பரப்பப்படும் வதந்தி. அதிமுக ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது தவெக அந்த அணிக்கு எப்படி வரும்? பாஜகவைத் தங்கள் கொள்கை எதிரி என்று விஜய் அறிவித்திருக்கிறார். அப்படி என்றால் பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்குமா? அல்லது பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு அதிமுக வெளியேறத் தயாராக இருக்கிறதா? அதேபோல், அதிமுக தலைமை கூட்டணிக்கு கூட நம்பத்தகுந்த கட்சி இல்லையா என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.” என்றார்.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின் முன் நடந்த தகராறு தொடர்பான கேள்விக்கும் திருமாவளவன் பதிலளித்தார். அவர் தெரிவித்ததாவது:-
“அண்ணாமலை முந்திரிக்கொட்டைத்தனமாக இதிலே வந்து விமர்சனம் செய்தது எங்கள் மீது வழக்கு பதிவு செய்ய சொன்னது உள்நோக்கம் கொண்டது. இதற்குப் பின்னால் பாஜக இருக்கிறது. நான் ஆர்ப்பாட்டத்துக்கு வருவது தெரிந்த உடனே, அங்கிருக்கும் வழக்கறிஞரிடம் சொல்லி, அங்கு ஏதாவது பிரச்னை செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இது திட்டமிட்ட ஒன்று. இது குறித்து நான் முதல்வரைச் சந்தித்து, இதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்போகிறேன். இது எனது பாதுகாப்பு தொடர்புள்ள விஷயமாகிவிட்டது. சாதியைப் பார்த்துத்தான் அந்த வழக்கறிஞரை அடித்தார்கள் என்று ஒரு சாதிக்கு எதிராக எங்களை நிறுத்தப் பார்க்கிறார்கள். நாங்கள் எப்படி ஒரு சாதிக்கு எதிராக செயல்பட முடியும்? அப்போது எங்களை ஒரு சாதிக்கு எதிராக நிறுத்தும் முயற்சியில் ஏன் அண்ணாமலை ஈடுபடுகிறார்? ஏன் சமூகப் பதட்டத்தை உருவாக்குகிறார். அண்ணாமலை பாஜக மாநில தலைவர் இல்லை என்பது அவருக்குத் தெரியுமா?” என்று கேள்வியெழுப்பினார்.