தமிழ்நாடு

விஜயுடன் பெரியார் மற்றும் அம்பேத்கர்: வாழ்த்து சொன்ன திருமாவளவன்!

விஜய் அவர்கள் கட்சி தொடங்கியதும் ஒரு மாநாட்டை நடத்துகிறார். அவரது மாநாடு தமிழக அளவில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராம் அப்பண்ணசாமி

விக்கிரவாண்டியில் தயாராகிவரும் தவெக மாநாட்டுத் திடலில் விஜயுடன் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோருக்கும் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு வெற்றிபெற விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

தவெகவின் முதல் மாநில மாநாடு வரும் அக்.27-ல் விக்கிரவாண்டிக்கு அருகே உள்ள வி. சாலை கிராமத்தில் நடைபெறுகிறது. சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் தயாராகிவரும் மாநாட்டுத் திடலின் பணிகளில் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மாநாட்டுத் திடலின் முகப்பு வாயிலில் கோட்டை மதில் சுவர் போன்ற அமைப்புடன், இரு புறங்களிலும் யானைகள் பிளிறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு மேடையில் `வெற்றி கொள்கை திருவிழா’ என்ற வாசகம் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் பாதுகாப்புக்காக சுமார் 700 சிசிடிவி காமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மாநாட்டு மேடையின் இடதுபுறத்தில் விஜயுடன் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களுக்கும் பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முதல் மாநாட்டில் வைத்து கட்சியின் கொள்கைகளையும், கட்சிக் கொடிக்கான விளக்கத்தையும் அறிவிக்கிறார் விஜய்.

நேற்று (அக்.24) இரவு விசிக சார்பில் விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தது திருமாவளவன் பேசியவை பின்வருமாறு:

`விஜய் அவர்கள் கட்சி தொடங்கியதும் ஒரு மாநாட்டை நடத்துகிறார். அந்த மாநாடு வெற்றிகரமாக அமைய வேண்டும். அவரது மாநாடு தமிழக அளவில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.