தலைவர், பொதுச்செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த பிறகே விசிகவில் உள்ள தலித் அல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதவ் அர்ஜூனா விவகாரம் பற்றி விளக்கமளித்துள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
மதுரை விமானநிலையத்தில் இன்று (டிச.8) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசியவை பின்வருமாறு,
`விசிக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என ஏற்கனவே பலமுறை நான் விளக்கிக் கூறியிருக்கிறேன். தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். எனவே புதிதாக ஒரு கூட்டணியில் விசிக இடம்பெறவேண்டும் என்ற தேவை எழவில்லை. அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
விசிக குறிவைக்கப்படுகிறது என்பதைவிட திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கக்கூடாது அதை சிதறடிக்கவேண்டும் என்பது அனைத்து எதிர்க்கட்சிகளின் செயல்திட்டமாக உள்ளது. தொடர் வெற்றிகளை பெற்றுவரும் திமுக கூட்டணி வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது.
அதற்கு விசிகவை ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என சிலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. கட்சியில் பத்து துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும்போது தலைவர், பொதுச்செயலாளர் அடங்கிய உயர்நிலைக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கவேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
குறிப்பாக விசிகவில் தலித் அல்லாதவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு தலைவர், பொதுச்செயலாளர் அடங்கிய உயர்நிலை குழுவின் கவனத்திற்குச் சென்று, அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்திய பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் நடைமுறையும் உள்ளது’ என்றார்.