கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

தனி நபர்களுக்கு கருத்து சொல்ல சுதந்திரம், உரிமை உள்ளது: திருமாவளவன்

கிழக்கு நியூஸ்

ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு, உரிமை உண்டு என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் கூட்டணி தொடர்பாக எந்தச் சிக்கலும் எழவில்லை, எழாது. 2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமின்றி 2029-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையும் கருத்தில்கொண்டு கட்சி நலன், கூட்டணி நலன், மக்கள் நலன் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு விசிக முடிவெடுக்கும். ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு, உரிமை உண்டு.

எல்லாக் கட்சிகளிலும் அப்படி அவரவர் கருத்தைச் சொன்னாலும், இறுதியில் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்சி கட்டுப்படும். ஆதவ் அர்ஜுனும் கூட்டணி தொடர்பாக தலைமைதான் முடிவெடுக்கும், அதில் நான் தலைமையிட மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். ஆகவே, திமுகவோடு கொண்டிருக்கிற நல்லுறவு, கூட்டணி உறவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் விசிக இயங்கிக் கொண்டிருக்கிறது, நகர்ந்துகொண்டிருக்கிறது. இதில் எந்த நெருடலும் இல்லை. கட்சி மற்றும் கூட்டணி ஆகியவற்றுக்கு எந்தச் சேதமும் ஏற்படாமல் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு தலைமை என்கிற முறையில் எனக்கு உள்ளது. எனவே, முன்னணி தோழர்களோடு கலந்துபேசி முடிவை எடுப்போம்" என்றார் திருமாவளவன்.

விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் ஊடகங்களில் அளித்து வரும் நேர்காணல் திமுக கூட்டணியில் சர்ச்சையாக வெடித்துள்ளன. திரைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகாலம் அனுபவம் கொண்ட எங்களுடையத் தலைவர் துணை முதல்வர் ஆக வேண்டும் என நாங்கள் விரும்புவதில் தவறில்லையே எனப் பேசியிருந்தார். வடமாநிலங்களில் திமுகவின் வெற்றிக்கு விசிகவின் வாக்குகள் காரணம் என்ற வகையில் ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்துக்கு ரவிக்குமார், வன்னி அரசு உள்ளிட்டோர் முரண்பட்டிருந்தார்கள். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசாவும் ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார் என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு திருமாவளவன் முற்றுப் புள்ளி வைப்பாரா என்ற கேள்விகள் அரசியல் சூழலில் இருந்தன. சென்னை வரும் முன் கோவை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக - விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது, எழுவதற்கும் வாய்ப்பு இல்லை என்று விளக்கமளித்தார்.