கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

திமுகவிடம் 25 இடங்கள் கேட்க விருப்பம்?: திருமாவளவன் விளக்கம்

எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதைக் கூட்டணியில்...

கிழக்கு நியூஸ்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க விருப்பமுள்ளதாக வன்னியரசு கூறிய கருத்துக்கு திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு முன்னணி தமிழ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியொன்றில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்டுப் பெற விரும்புவதாகக் கூறியிருந்தார்.

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

"வன்னியரசு தனிப்பட்ட ஒரு சுதந்திரத்தின் அடிப்படையில் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதைக் கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும்போது தான் முடிவு செய்வோம். முன்கூட்டியே இவ்வளவுதான் எங்களுக்கு வேண்டும் என்றெல்லாம், நிபந்தனையாக நாங்கள் முன்வைக்க வாய்ப்பில்லை, அப்படி எப்போதும் வைத்ததும் இல்லை.

ஏற்கெனவே எங்களுக்கு 10 தொகுதிகள் கொடுத்துள்ளார்கள். அது இரட்டை இலக்கம் தான். 2011-ல் 12 தொகுதி வரையில் பேசி, தவிர்க்க முடியாததன் காரணத்தால் அதை 10 என்கிற அளவிலேயே இறுதி செய்தோம். ஆகவே, எங்களுடைய எண்ணிகையைப் பெருக்க வேண்டும், கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது இயல்பான ஒன்றுதான். கூட்டணியில் பல கட்சிகள் இருக்கும்போது, அவற்றையெல்லாம் அனுசரித்து எங்கள் முடிவை நாங்கள் மேற்கொள்வோம்" என்றார் திருமாவளவன்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காட்டுமன்னார் கோயில், செய்யூர், நாகப்பட்டினம், வானூர், அரக்கோணம், திருப்போரூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 4-ல் வெற்றி கண்டது.