திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரம் தொடர்பாக, கொளத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தின் வையூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் பொலினேனி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார். தனது குடும்பத்துடன் புழலை அடுத்து உள்ள பிரிட்டானியா நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசித்து வந்தார்.
அண்மையில் திருமலா பால் நிறுவனத்தில் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்தபோது, ரூ. 40 கோடி அளவுக்கு கையாடல் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது. அந்த பணத்தை கருவூல மேலாளர் நவீன் கையாடல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த கையாடல் குறித்து கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நவீனை காவல்துறையினர் விசாரித்தபோது, பணத்தை கையாடல் செய்ததை அவர் ஓப்புக்கொண்டதாகவும், திருப்பி அளித்துவிடுவதாக உறுதி அளித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 9-ம் தேதி இரவில் தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே இருந்த ஒரு குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த நவீனின் உடல் மீட்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டது.
திருமலா நிறுவன ஊழியர்கள் இருவர் வீட்டிற்கு வந்து, பணத்தை திரும்பிக் கொடுத்தாலும் சிறையில் தள்ளிவிடுவதாகக் கூறி நவீனை மிரட்டியதாக, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையே நவீன் மரணத்துடன் கொளத்தூர் துணை ஆணையரை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், கடந்த ஜூன் 24 அன்று திருமலா பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர் முகமது தமிமுல் அன்சாரி, கரூவூல மேலாளர் நவீன் பொலினேனி ரூ. 40 கோடி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்ததாகவும், அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு பட்டியலை சமர்பிக்காததால், புகார் மனு விசாரணை நிலையில் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மேலும், கடந்த ஜூன் 25 அன்று சட்ட மேலாளர் முகமது தமிமுல் அன்சாரி தரப்பில் இருந்து கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனு, மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளரிடம் விசாரணைக்காக அனுப்பப்பட்டது என்றும், ஆனால் நவீனை அழைத்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும், அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, தூக்குப் போட்டுக் கொள்வதற்கு முன்பு தனது சகோதரி மற்றும் திருமலா பால் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி, தனது தற்கொலை முடிவை நவீன் தெரியப்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதில், காவல்துறை மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் அவர் முன்வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கொளத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.