தமிழ்நாடு

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை: அமைச்சர் சிவசங்கர்

தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ல் வெளியிடப்பட்ட ஆணையின்படி, பொருளாதாரத்தில் நிலவும் பணவீக்கத்தை அளவிடும் வருடாந்திர நுகர்வோர் விலைக் குறியீட்டை (Consumer Price Index) அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டு ஜூலை மாதத்திலும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி (All India CPI) ஏப்ரல் 2025-ல் பணவீக்கம் 3.16% ஆக உள்ளது. இதன் அடிப்படையில், வரும் ஜூலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது தொடர்பாக இன்று (மே 20) தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

`கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பின்வருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.

எனினும் ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக்கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும், எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.