இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள் தொடங்கலாம் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
`மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜூலை 8 அன்று கோவையில் நடைபெற்ற பரப்புரையின்போது, இந்து சமய அறநிலையத்துறைக்கு கோயில்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் கல்லூரி கட்டுவதை அவர் வெளிப்படையாகக் கண்டித்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னையில் இன்று (ஜூலை 10) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது,
`பசி பிணி போக்கும் அன்னதானம் இந்து சமய அறநிலையத்துறையின் முதல் அறப்பணி. அதை முழுமையாக இந்த ஆட்சி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. அடுத்து அறியாமையை நீக்கம் கல்விப் பணி. அந்த கல்விப் பணியையும் இந்த ஆட்சி செம்மையோடு, செழுமையோடு நடத்திக்கொண்டிருக்கிறது.
அடுத்தது உடற்பிணி நீக்கும் மருத்துவம். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் 16 திருக்கோயில்களில் மருத்துவமனைகளை கொண்டுவந்திருக்கிறோம். இந்த மூன்று பிணிகளையும் ஒரே சேர நீக்குவதுதான் இறைவனின் அம்சம்.
கல்விக்கு சரஸ்வதி என்கின்றோம், மருத்துவத்திற்கு மருந்தீஸ்வரர் என்கிறோம், பசிப்பிணி போக்கும் தெய்வத்திற்கு வைத்தீஸ்வரனை ஒப்பிடுகின்றோம். அந்த வகையில் இறைவன் கட்டளையையும், மக்கள் கட்டளையையும் ஒருசேர நிறைவேற்றுகிறோம்.
இந்த ஆட்சியில் மட்டுமல்ல, சோழர் காலத்திலும் மிகப்பெரிய கல்விச்சாலை இருந்ததாகவும், அதில் 11 பாடப்பிரிவுகள் இடம்பெற்றிருந்ததாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. அரக்கோணம் அருகே உள்ள திருமுக்கூடல் கோயில் வளாகத்தில், வீர ராசேந்திரன் காலத்தில், கல்விச் சாலையும், மருத்துவச் சாலையும் ஒரு சேர இயங்கி வந்திருக்கிறது.
இதுபோன்ற பல சான்றுகள் இருக்கின்றன. சமணப்பள்ளிகளில் அந்த காலத்தில் கல்வி கற்றுத்தரப்பட்டது. அதன் காரணமாகவே பள்ளி என்ற சொல் கல்விக்கூடத்திற்கான சொல்லாக நிரந்தரமாக அமைந்துவிட்டது.
இந்து சமய அறநிலையத்துறை கொடை சட்டம் உட்பிரிவு 66(1)-ல் சொல்லப்பட்டுள்ளவாறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தொடங்கலாம். தத்துவம், கோயில் கட்டடக்கலை போன்ற படிப்புகளை உள்ளடக்கி கல்லூரிகளைத் தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டமே சொல்கிறது.
அந்த வகையில்தான் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 4 கல்லூரிகளை புதிதாக தமிழக முதல்வர் தொடங்கினார். அருகில் இருக்கும் ஆந்திர மாநிலத்தில் (திருப்பதி தேவஸ்தானம்) 7 கல்லூரிகள், பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்படுகின்றன. கேரளம் மாநிலம் குருவாயூரில் 3 கல்லூரிகள் அந்த திருக்கோயில் சார்பில் நடத்தப்படுகின்றன’ என்றார்.