தமிழ்நாடு

சபாநாயகர் அப்பாவு பேசியதில் அவதூறு இல்லை: உச்ச நீதிமன்றம்

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நாற்பது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்தார்கள்.

ராம் அப்பண்ணசாமி

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிராக, அதிமுகவைச் சேர்ந்த பாபு முருகவேல் தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த நவம்பர் 2023-ல் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, `முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நாற்பது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்தார்கள். ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதை ஏற்க மறுத்துவிட்டார்’ என்றார்.

இதைத் தொடர்ந்து, அப்பாவுவின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். பிறகு இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதனை அடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார் அப்பாவு. அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, அப்பாவு மீது சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை ரத்துசெய்து தீர்ப்பு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பாபு முருகவேல். மேல்முறையீட்டு மனுவை இன்று (டிச.5) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் `சபாநாயகர் அப்பாவு பேசியதில் அவதூறு இல்லை’ எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, அதை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளனர்.