தமிழ்நாடு

குடிநீரால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகம் உள்ளது: மா. சுப்பிரமணியன்

குழாய் வழியாக விநியோகிக்கப்படும் குடிநீரைப் பருக தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மூலம் லாரிகளில் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

பல்லாவரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் மூன்று பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், குடிநீரால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகம் உள்ளது என பேட்டியளித்துள்ளார் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களை சந்தித்த பிறகு, தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து மா. சுப்பிரமணியன் பேசியவை பின்வருமாறு,

`பல்லாவரத்துக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியிலும், ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மலைமேடு பகுதியிலும் உள்ள மக்களுக்கு கடந்த 2-3 நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 33 பேர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை முடிந்து 14 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 19 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், இருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து உள்நோயாளிகளையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தேன். இந்த விவகாரத்தால் மருத்துவமனைக்குக் கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்த திரிவேதி, மோகனரங்கன் ஆகியோர் உடல் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. குடிநீரால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகம் உள்ளது.

அந்தப் பகுதியில் இருக்கும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டிற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரச்னையின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு ஆய்வு முடிவை விரைவில் தர வலியுறுத்தவுள்ளோம். இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் அங்கு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் குழாய் வழியாக விநியோகிக்கப்படும் குடிநீரைப் பருக தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மூலம் குடிநீரை லாரிகளில் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றார்.