டியூட் படத்தில் இளையராஜாவின் கருத்த மச்சான், நூறு வருஷம் ஆகிய பாடல்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காப்புரிமைச் சட்டத்திற்கு எதிராகப் பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் தனது பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தி வருவதாக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்கு தொடர்ந்து வருகிறார்.
குறிப்பாக சோனி நிறுவனம் மீது அவர் வழக்குகள் தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் வெளியான டியூட் படத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் உருவான கருத்த மச்சான் மற்றும் நூறு வருஷம் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான மனுவில், படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பாடல்களையும் நீக்க உத்தரவிட வேண்டும் என்றும், பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் நேற்று (நவ.27) விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜாவின் அனுமதி இன்றி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறி, டியூட் படத்தில் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தி உள்ளார்கள் என்றும், எக்கோ நிறுவனம் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போது கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார். பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. படம் திரையரங்கிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன்” என இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பி, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி என். செந்தில்குமார், "இளையராஜாவின் பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் படத்தில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இளையராஜாவின் பாடல்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்போது பாடலை நீக்க 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று மைத்ரி மூவீஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிராகரித்த நீதிமன்றம், இளையராஜாவின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, ஜனவரி 7 அன்று வழக்கைத் தள்ளி வைத்தது.
The Madras High Court has ordered the removal of Ilayaraja's songs from the film Dude.