அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் தொடர ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களும் தொடர்ந்து பணியாற்றவும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தேர்வில் தகுதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களைப் பாதிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணியைத் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதிச் சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ளவர்கள் இந்தத் தேர்வை எழுதத் தேவையில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், சிறுபான்மை நிறுவனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு கட்டாயம் ஆக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பி, இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உயர் அமர்வுக்குப் பரிந்துரைத்துள்ளது.