திட்டத்தைத் தொடக்கி வைத்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம்: https://twitter.com/Udhaystalin
தமிழ்நாடு

தமிழக அரசின் ஏஐ பயிற்சி வகுப்புகள்: எப்படிச் செயல்படுத்தப்படும்?

ஜெ. ராம்கி

நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் கணினிக் கல்வியை அறிமுகப்படுத்தியது போல் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கல்வியையும் அறிமுகப்படுத்த இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவின் நுட்பங்களைப் பயிற்சியளிக்கக்கூடிய 'டீல்ஸ்' திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை முன்னெடுப்பதை சுட்டிக்காட்டிப் பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் தொடக்கப் பள்ளிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்கும் விதமாக 'டீல்ஸ் - TEALS (Technology Education and Learning Support)' திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்து செயல்பட்டு உருவாக்கியுள்ள 'டீல்ஸ்' திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாகத் தமிழகத்தின் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 14 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் 100 பள்ளிகளிலும் 'டீலஸ்' திட்டம் தற்போது தொடங்கப்படவிருக்கிறது. இவற்றில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன. இதன் மூலம் ஹெச்டிஎம்எல் (HTML), சி++ (C++), பைதான் (Python), கேமிங் (Gaming) & செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் மாணவர்களுக்குப் பல்வேறு பாடங்கள் இடம்பெறுகின்றன.

இதுவொரு முன்னோடித் திட்டம் என்கிறார்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளர்கள். 'டீல்ஸ்' திட்டத்தின்படி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. ஏற்கெனவே மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஹெச்டிஎம்எல் (HTML), சி++ (C++), பைதான் (Python) போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட பாடமும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.

தமிழக அரசுப் பள்ளிகளுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் வடிவமைத்துள்ள பாடத்திட்டத்தில் முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன. இணைய வழியில் பயிற்சிகளும், மாணவர்களுக்கான பயிற்சி உதவிகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறைகளில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு பயிற்சித் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவினர் 'டீல்ஸ்' திட்டத்தை வழிநடத்துகிறார்கள். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பயிற்சி வகுப்புகளும் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1984-ல் மத்திய அரசு, CLASS என்னும் திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் கணினிக் கல்வியை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்தது. ஏறக்குறைய 250 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து கணிணி குறித்த அறிமுகம் தரப்பட்டது. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே வழியில் செயற்கை நுண்ணறிவு குறித்த திட்டத்தையும் நாடு முழுவதும் முன்னெடுக்க வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.