தமிழ்நாடு

தீபாவளி மது விற்பனை: சரிந்த டாஸ்மாக் வருமானம்!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்தபோதும், மனமகிழ் மன்றங்கள், ஹோட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

ராம் அப்பண்ணசாமி

நடப்பாண்டு தீபாவளியை ஒட்டி தமிழ்நாட்டில் சுமார் ரூ. 438.53 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், கடந்த வருட தீபாவளி விற்பனையைவிட இது குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக்கின் கட்டுப்பாட்டில் சுமார் 4,829 மதுக்கடைகள் மாநிலம் முழுவதும் உள்ளன. இந்த மதுக்கடைகளில் வார நாட்களின்போது நாள்தோறும் ஏறத்தாழ ரூ. 150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது எனவும், அதுவே வாரத்தின் இறுதி நாட்களில் ரூ. 200 கோடியாக அதிகரித்து, பண்டிகை நாட்களின்போது சுமார் ரூ. 250 கோடியாக உயரும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த அக்.31-ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அக்.30-ல் ரூ. 202.59 கோடிக்கும், அக்.31-ல் ரூ. 235.94 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. இதன்மூலம் இந்த 2 நாட்களும் சேர்த்து டாஸ்மாக் மதுக்கடைகளில் மொத்தமாக ரூ. 438.53 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் 12-ல் கொண்டாடப்பட்ட தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சுமார் ரூ. 467.63 கோடிக்கு மது விற்பனையானது. அதை ஒப்பிடும்போது இந்த வருடம் ரூ. 29.10 கோடி அளவுக்கு மது விற்பனை குறைந்துள்ளது. மது விற்பனை நடப்பாண்டில் குறைந்ததற்கு மாத இறுதியில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது காரணமாக கூறப்படுகிறது.

அதே நேரம், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்தபோதும், மனமகிழ் மன்றங்கள், ஹோட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அந்த இடங்களில் விற்பனை அதிகரித்துள்ளதால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.