தமிழ்நாடு

தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது: அண்ணாமலை

தங்கு தடை இல்லாமல் அனைத்துக் குழந்தைகளும் படிக்கவேண்டும், அதேநேரம் கல்வியையும் தரத்துடன் கொடுக்கவேண்டும் என மத்திய அரசு கருதுகிறது.

ராம் அப்பண்ணசாமி

மத்திய அரசுப் பள்ளிகளில் 5, 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்தது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளதாக பல்வேறு அறிக்கைகளை மேற்கோள்காட்டிப் பேசியுள்ளார்.

சென்னையில் இன்று (டிச.24) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியவை பின்வருமாறு,

`தங்கு தடை இல்லாமல் அனைத்துக் குழந்தைகளும் படிக்கவேண்டும், அதேநேரம் கல்வியையும் தரத்துடன் கொடுக்கவேண்டும் என மத்திய அரசு கருதுகிறது. ஆசிரியருக்கென தகுதிகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் எடுப்பது, மாணவர்கள் சரியாகப் படிப்பது என்கிற இரண்டு அளவுகோல்களும் முக்கியம்.

5-ம் வகுப்பு மாணவர்கள் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், 2 மாதங்கள் பயிற்றுவித்து மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கப்படுகிறது. அதிலும் தேர்ச்சியடையவில்லை என்றால் அதே வகுப்பில் தக்க வைக்கப்படுவார்கள், அதன்பிறகு அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும். கல்வியின் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கம்.

இந்திய முழுமைக்கும் உள்ள பள்ளி மாணவர்களின் தரத்தை அளவிடும் வகையிலான ஏ.எஸ்.இ.ஆர். (aser) அறிக்கை கடந்த 2018-ல் வெளியானது. இதில் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிலையில் தேசிய சராசரியை விட பின்தங்கி இருந்தது தமிழகம். அதேபோல இந்திய அளவில் 56 சதவீத 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கும், 5-ம் வகுப்பில் 72 சதவீத குழந்தைகளுக்கும் பெருக்கல் தெரியவில்லை.

இதனால் இந்தியாவின் கல்வித் தரத்தை உயர்த்தவேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது. 2021-ல் வெளியான நேஷனல் அச்சீவ்மெண்ட் சர்வேயின்படி (national achievement survey) 3, 5, 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் தேசிய சராசரியைவிட நாம் பின்தங்கி இருக்கிறோம். எனவே பள்ளி மாணவர்களை பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறவைத்தோம் எனக் கூறுவது பெருமையாக இருந்தாலும், அது 1980-களில் தேவைப்பட்டது.

தற்போது 2024-ல் மாணவர்கள் பள்ளிக்கு வருவதுடன், அடிப்படையான விஷயங்களைப் படிக்கவேண்டும் என்பது தேவையாக உள்ளது. எனவே இந்த குறிப்பிட்ட காரணத்திற்காகவே மத்திய அரசு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது’ என்றார்.