ANI
தமிழ்நாடு

ஏப்ரலில் மழையா வெயிலா?: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வரும் நாள்களில் இரு நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றுக்கு வாய்ப்பு உள்ளது.

கிழக்கு நியூஸ்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஏறத்தாழ 38 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. முதன்முறையாக வேலூரில் இன்று 40 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.

வெயிலின் தாக்கம் குறித்து பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"கோடையில் முதல் மாவட்டமாக வேலூரில் இன்று 40 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் இந்தாண்டில் பதிவான மிகவும் வெப்பமான நாள் இன்று. அடுத்த 10 நாள்களுக்கும் இதே வெப்ப நிலை தான் தொடரும். வேலூர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும். வரும் நாள்களில் இரு நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றுக்கு வாய்ப்பு உள்ளது.

முதல் வாய்ப்பு - ஏப்ரல் 2-வது வாரத்தில் அரிய குறைந்த காற்றழுத்தம் உருவாகி தமிழ்நாடு அல்லது தெற்கு ஆந்திரம் நோக்கி நகரும். வெப்பம் குறையும்.

இரண்டாவது வாய்ப்பு (ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்ப அலை) - ஏப்ரல் 2-வது வாரத்தில் அரிய குறைந்த காற்றழுத்தம் உருவாகி தமிழ்நாட்டை விட்டு விலகிச் செல்லும். செல்லும்போது ஈரப்பதம் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிடும். இது மேற்கொண்டு வெப்ப வானிலையை உருவாக்கும்.

ஏப்ரல் 2 அல்லது 3 அன்று இதுகுறித்த தெளிவு கிடைக்கும்" என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.