ANI
தமிழ்நாடு

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல்

தமிழ்நாடு கல்விக்கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ராம் அப்பண்ணசாமி

தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது 14 பேர் கொண்ட குழு

2020-ல் மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தது தமிழ்நாடு அரசு. அதனைத் தொடர்ந்து 2021 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது திமுக. அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவியேற்ற பொன்முடி தமிழ்நாட்டுக்கென தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2022-ல் தமிழ்நாடு கல்விக்கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பொது மக்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள் எனப் பலரிடமும் கருத்து கேட்டு தமிழ்நாடு கல்விக்கொள்கையை உருவாக்கியது நீதிபதி முருகேசன் குழு.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை கடைபிடிக்கவும், நீட் தேர்வை ரத்து செய்யவும், மாநில கல்விக்கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இருக்கக்கூடாது, +2 மட்டுமின்றி +1 மதிப்பெண் அடிப்படையிலும் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தவும் நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.