பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் பத்திரமாக உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார் தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தின்போது, தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடைபெற்றது. இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று (ஜன.24) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,
`பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டி பஞ்சாபின் பத்திண்டா மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தின் அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து 36 வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் 3 மேலாளர்கள் மற்றும் 3 பயிற்றுநர்கள் சென்றுள்ளனர். அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையே நடைபெற்ற போட்டியில் தமிழக வீராங்கனை ஒருவர் மீது தாக்குதல் நடைபெற்றதாக இன்று (ஜன.24) காலை புகார் வரப்பெற்றது.
இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக தொலைபேசியில் அழைத்துப் பேசினோம். புகாரின் அடிப்படையில் பயிற்றுனர் பாண்டியராஜனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். வதந்திகளைப் பரப்பவேண்டாம். மாணவிகள் பத்திரமாக உள்ளனர்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா பஞ்சாப் டிஜிபியை தொடர்பு கொண்டு பேசினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியரைத் தொடர்பு கொண்டு பேசினார்.
ஆட்டத்தின்போது புள்ளிகள் தொடர்பாக ஒரு குளறுபடி ஏற்பட்டு, மாணவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு நடந்துள்ளது. யாருக்கும் பெரிய அடி எதுவும் ஏற்படவில்லை. சிறு சிறு சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டுவிட்டது’ என்றார்.