தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் அறிக்கை மாஸ்டர் கிளாஸ்: மத்திய நிதி ஆணைய தலைவர் பாராட்டு

நிதிப்பகிர்வு தொடர்பான எங்களது அணுகுமுறையில் தேச நலனுடன், மாநிலங்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும் என முதல்வர் பேசினார்.

ராம் அப்பண்ணசாமி

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை ஏன் அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வழங்கிய அறிக்கை மாஸ்டர் கிளாஸ் என பாராட்டியுள்ளார் 16-வது மத்திய நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா.

2026 முதல் 2031 வரையிலான 5 வருடங்களுக்கான மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப்பகிர்வு குறித்த பரிந்துரைகளை வழங்க அரவிந்த் பனகாரியா தலைமையில் 16-வது மத்திய நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்பு ஒவ்வொரு மாநில அரசுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் நிதி ஆணையக் குழு உறுப்பினர்கள்.

இந்த ஆலோசனைகளின் ஒரு பகுதியாக 4 நாள் பயணமாக கடந்த நவ.17-ல் சென்னைக்கு வந்தனர் மத்திய நிதி ஆணையக் குழு உறுப்பினர்கள். நேற்று (நவ.18) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நிறைவு பெற்றதும், செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா பேசியவை பின்வருமாறு,

`நிதிப்பகிர்வு தொடர்பான எங்களது அணுகுமுறையில் தேச நலனுடன், மாநிலங்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும் என முதல்வர் பேசினார். எங்களிடம் நீளமான மற்றும் கனமான அறிக்கையை வழங்கியுள்ளனர். நிதிப்பங்கீடு குறித்து தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த அறிக்கையை, நான் மாஸ்டர் கிளாஸ் என்று கூறுவேன்.

இதுவரை தமிழ்நாடு மட்டும்தான் வரிப்பகிர்வை ஏன் அதிகரிக்க வேண்டும் என விளக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தற்போது வரிப்பகிர்வு முறையில் மாநிலங்களுக்கான பங்கு 41 சதவீதமாகவும், மத்திய அரசுக்கான பங்கு 59 சதவீதமாகவும் உள்ளது. அதேநேரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், பேரிடர் நிவாரண நிதிகள் போன்றவை மத்திய அரசு பட்ஜெட் வழியாகவே வழங்கப்படுகின்றன.

வரிப்பகிர்வில் 59 சதவீதம் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டாலும், அதில் இருந்து இவ்வாறு மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்த வரிப்பகிர்வை 50 சதவீதத்திற்கு உயர்த்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து, பெரும்பான்மையான மாநிலங்களும் இத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஆனால் பிற மாநிலங்கள் இது எங்களது பரிந்துரை என பொத்தாம் பொதுவாக கூறிவார்கள். ஆனால் எதனால் வரிப்பகிர்வை அதிகரிக்கவேண்டும் என ஆதாரப்பூர்வமான தரவுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து விளக்கமாக அறிக்கை வழங்கியுள்ளது தமிழக அரசு’ என்றார்.