`லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். இந்த மரணங்களுக்கு தமிழக அரசே பொறுப்பு’ என இன்று (அக்.07) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
வான் சாகச நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியவை பின்வருமாறு:
`லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் கூடிய காரணத்தால், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகள் அங்கே செய்துகொடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதல்வரின் அறிவிப்பு காரணமாகவே லட்சக்கணக்காணோர் அங்கே கூடும் சூழல் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக எத்தனை நபர்கள் அங்கே கூடுவார்கள் என்று உளவுத்துறை வாயிலாக அறிந்துகொண்டு அதற்குத் தக்கவாறு ஏற்பாடுகளை செய்திருந்தால் இந்த உயிர்ச்சேதங்களை தவிர்த்திருக்கலாம்.
மக்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமை. ஆனால் முதலமைச்சரின் அறிவிப்பை நம்பி நிகழ்ச்சியைப் பார்க்க வந்த மக்களுக்கு துன்பம்தான் நேர்ந்தது. விலைமதிக்க முடியாத உயிரை இழந்ததுதான் மிச்சம். அரசின் செயலற்றதன்மை இதில் வெளிப்படுகிறது. இது வெட்கக்கேடான விஷயம்.
இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இனியாவது ஸ்டாலின் தலைமையிலான அரசு லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். மக்களைப் பாதுகாப்பதே அரசின் கடமை. எனவே இதற்கு தமிழக அரசே முழு பொறுப்பு. முதல்வர் ஸ்டாலின்தான் விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளியுங்கள் என அறிவிப்பு விடுத்தார்’ என்றார்.