கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருதை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
தந்தை பெரியாரை நினைவுகூறும் வகையில், பிற இந்திய மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு, சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ல் ஆண்டுதோறும் "வைக்கம் விருது" வழங்கப்படும் என கடந்த 2023-ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதை ஒட்டி, கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு 2024-ம் ஆண்டுக்கான "வைக்கம் விருது" வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மையான செயல்பாட்டைக் கொண்டிருக்கும் தேவநூர மஹாதேவா, மக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். அத்துடன், சமூகத்தில் நிலவும் சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இவர் செயல்பட்டுவருகிறார். மத்திய அரசின் பத்மஸ்ரீ, சாகித்ய அகாதெமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
தேவநூர மஹாதேவாவுக்கு ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையுடன், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கத்தை, நாளை (டிச.12) கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.