ஜூலை மாதத்துடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் ஐந்து வருட பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
பீஹார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என். ரவி கடந்த ஆகஸ்ட் 1, 2019-ல் நாகலாந்து மாநில ஆளுநராக அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டார்.
2015-ல் இந்திய அரசுக்கும், நாகாலாந்து மாநில பிரிவினைவாத ஆயுதக் குழுக்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மத்தியஸ்தராக இருந்து முக்கியப் பங்காற்றினார் ஆர்.என். ரவி. இதை அடுத்து அம்மாநில ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார்.
ஆனால் ஆளுநராகப் பொறுப்பேற்றதும் அமைதி ஒப்பந்தத்தின் ஷரத்துகளை ஆர்.என். ரவி தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தவறாகக் கையாள்கிறார் என்று அமைதி ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட நாகாலாந்து ஆயுதக்குழுக்களில் ஒன்றான ஐசக்-முய்வா குழு குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 18, 2021-ல் தமிழ்நாட்டின் ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார் ஆர்.என். ரவி.
மாநில ஆளுநர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். இதன்படி ஆர்.என். ரவியின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் (ஜூலை 31) முடிவடைகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை 15-ல் நான்கு நாள் பயணமாக தில்லி சென்ற ஆர்.என். ரவி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜூ ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இதனால் ஆர்.என். ரவியின் ஆளுநர் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது அவர் வேறு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது போல கேரள ஆளுநர் முஹம்மது ஆரிஃப் கானின் பதவிக்காலம் செப்டம்பர் 5-ல் முடிவுக்கு வருகிறது. மேலும் தெலங்கானா மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு முழு நேர ஆளுநர்கள் தற்போது பொறுப்பில் இல்லை.