கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும்: அண்ணாமலை

கிழக்கு நியூஸ்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசு இலக்கைப் பெரிதாக நிர்ணயிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இருநாள்கள் நடைபெற்றன. இந்த மாநாட்டின் மூலம் ரூ. 5 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும் என தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது. எனினும், இலக்கைத் தாண்டி ரூ. 6.64 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து பேசினார்.

அவர் கூறியதாவது:

"உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடுகளை ஈர்த்த அரசுக்குப் பாராட்டுகள். அதேசமயம், முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட வேண்டிய முதலீடுகளின் இலக்கை அரசு பெரிதுபடுத்தி உழைக்க வேண்டும்.

இதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் அதானியைக் கடுமையாக விமர்சித்தார்கள். பாஜகவுக்கு அதானி குழுமம் நிதியுதவி வழங்குவதாகக் குற்றம்சாட்டினார்கள். ஆனால், இன்று அதானி குழுமத்திடமிருந்து ரூ. 42,768 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளார்கள். இந்த முதலீடுகளைப் பெற்ற பிறகு எக்ஸ் தளத்தில் தலைவர்கள் பாராட்டி பேசுகிறார்கள்.

சில கட்சிகள் அரசியலைவிட்டு தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பாடுபட வேண்டும் என்பதை இந்த மாநாடு காட்டுகிறது. எங்களுடைய எதிர்பார்ப்பு, குறைந்தபட்சம் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும் என வைத்திருந்தோம்.

உத்தரப் பிரதேசத்தால் 33 லட்சம் கோடி அளவில் முதலீடுகளை ஈர்க்க முடியும்போது, நம்மால் ஏன் 6.6 லட்சம் கோடி அளவில் மட்டுமே முதலீடுகளை ஈர்க்க முடிகிறது என்கிற கேள்வியை எழுப்பி, வரவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாடுகளை மேலும் வெற்றிகரமானதாக அமைக்க வேண்டும்.

இந்த இடத்தில் நான் அரசியல் பேசவில்லை. வந்த ரூபாய் அனைத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த நேரத்தில் பெருமை பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே மற்ற மாநிலங்களில் ஈர்க்கப்படும் முதலீடுகள் குறித்த தரவுகளை வெளியிடுகிறேன்" என்றார் அவர்.