சிஎஸ்கே ரசிகர்கள் (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

சிஎஸ்கே ஆட்டங்களுக்கு இலவச பேருந்து சேவையா?: அரசுத் தரப்பில் விளக்கம்

கிழக்கு நியூஸ்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்களுக்குப் பேருந்து சேவையை இலவசமாக வழங்கவில்லை என தமிழ்நாடு அரசின் உண்மைக் கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. கடந்த ஐபிஎல் பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பை வென்றதால், நிகழாண்டின் முதல் ஐபிஎல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தைக் காண வரும் ரசிகர்கள் ஆட்டத்துக்கான டிக்கெட்டை காண்பித்து அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. நஷ்டத்தில் இருக்கும் போக்குவரத்துத் துறை, பேருந்து சேவையை இலவசமாக வழங்குவது நியாயமா என்ற கேள்விகள் எழுந்தன.

இதற்கு தமிழ்நாடு அரசின் உண்மைக் கண்டறியும் குழு விளக்கம் தந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் போக்குவரத்துக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், ரசிகர்களுக்கான பயணச்செலவை, அணி நிர்வாகம் ஏற்கெனவே செலுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைந்து இதே நடைமுறையைப் பின்பற்றியதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.