தமிழ்நாடு

ரூ. 38,000 கோடியில் புதிய தொழில் முதலீடுகள்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

இந்தத் தொழில் முதலீடுகள் வாயிலாக ஏறத்தாழ 46,931 நபர்களுக்குப் புதிதாக வேலைவாய்ப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

கடந்த செப்.28-ல் நடந்த அமைச்சரவை மாற்றத்துக்கு பிறகு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.09) நடைபெற்ற தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ரூ. 38000 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகையில் கடந்த செப்.28-ல் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக ஆர். ராஜேந்திரன், வி. செந்தில் பாலாஜி, கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். அதே நாளில் சில தமிழக அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றி அமைத்தும், உதயநிதி ஸ்டாலினை முதல்வராக நியமித்தும் உத்தரவிட்டார் தமிழக ஆளுநர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.08) நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 14 புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியவை பின்வருமாறு:

`அமைச்சரவை கூட்டத்தில் ரூ. 38698.80 கோடி மதிப்பிலான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த ஒப்புதல் வழியாக வரக்கூடிய முதலீடுகள் வாயிலாக ஏறத்தாழ 46,931 நபர்களுக்குப் புதிதாக வேலைவாய்ப்பு உருவாகும் நிலை, முதல்வரின் தொடர் முயற்சியால் ஏற்பட்டிருக்கிறது.

மின்னணு உபகரணங்கள், கைபேசி தயாரிப்புக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்புத்துறை உபகரணங்கள், மருந்துப் பொருட்கள், தோல் அல்லாத காலணிகள் தயாரிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை அமோனியா-ஹைட்ரஜன் உற்பத்தி, மின் வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த 14 முதலீடுகள் வரப்பெற்றிருக்கின்றன’ என்றார்.