https://x.com/AppavuSpeaker
தமிழ்நாடு

டிசம்பரில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டப்பேரவைகளின் இரு கூட்டத்தொடர்களுக்கு இடையேயான இடைவெளி காலகட்டம் 6 மாதங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஒவ்வோரு வருடமும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் வழக்கமாக ஜனவரி மாதத்தில் தொடங்கும். ஆனால் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்து நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் பிப்ரவரி 12-ல் தொடங்கியது. இதை அடுத்து பிப்ரவரி 15-ல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2024-2025-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 19-ல் தொடங்கியது. அதன்பிறகு பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் நிறைவு பெற்று பிப்ரவரி 22-ல் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 18-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து முடிவுகள் வெளியான பிறகு, ஜூன் 20 முதல் 29 வரை துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள், சட்டமேலவைகள் ஆகியவற்றின் இரு கூட்டத்தொடர்களுக்கு இடையேயான இடைவெளி காலகட்டம் 6 மாதங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும். கடந்த ஜூன் 29-ல் கடைசியாக தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்படி டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

67-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றுள்ளார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. நவம்பர் 17-ல் அப்பாவு சென்னைக்குத் திரும்பியதும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு முறையாக வெளியாகும் எனத் தெரிகிறது.