ANI
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

ராம் அப்பண்ணசாமி

காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட தண்ணீரை தமிழ்நாடுக்குத் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது. மேலும் தமிழகத்துக்கு வினாடிக்கு 8,000 கன அடி மட்டுமே நீரைத் திறந்து விட முடியும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது.

கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 15) அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்க உள்ளது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து சட்ட வல்லுனர்களின் கருத்துகளைப் பெற்று தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என முன்பு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நடைபெற்றுவரும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்றுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், விசிக, பாஜக, பாமக, சிபிஐ (எம்), சிபிஐ, மதிமுக, தவாக, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.