தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

கிழக்கு நியூஸ்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019-ல் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி, அந்தப் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த 2021 பிப்ரவரியில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியும் தமிழிசைக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பொறுப்புகளை வகித்து வந்த அவர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகின. மக்களவைத் தேர்தலுக்கு பாஜக அறிவித்த முதலிரு வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வேட்பாளர்கள் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளதன் மூலம், மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதியாகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் தமிழிசை. மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பதில் அவருக்கு இரு சிக்கல்கள் உள்ளன. இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏற்கெனவே பொன். ராதாகிருஷ்ணன் இருக்கிறார். இதுதவிர விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணியும் கன்னியாகுமரியில் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என ஆரம்பத்தில் பேசப்பட்டது.

கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில் கனிமொழியிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை அவர் பிடித்தார்.

இந்த இரு மக்களவைத் தொகுதிகளைத் தாண்டி தமிழிசைக்கு சற்று நெருக்கமான இடம் என்றால் புதுச்சேரி. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்து அவ்வப்போது மக்களைச் சந்தித்துள்ளதால், இந்தத் தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட பிறகு, இதுதொடர்புடைய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.