தமிழிசை சௌந்தரராஜன் 
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் போதைக் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

யோகேஷ் குமார்

பிரதமர் மோடி நாட்டில் பிரிவினையை மட்டுமே பேசுகிறார் எனக் கூறி, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பிரசாரம் நடக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

தென் சென்னை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை வந்துவிட்டது” என பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: “தமிழ்நாட்டில் போதை மற்றும் வன்முறை கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் மீது அரசுக்கு அக்கறை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. மேலும், டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. சனாதானத்தை டெங்கு போல் ஒழிப்போம் என்றார்கள், ஆனால் டெங்குவையே ஒழிக்க முடியவில்லை.

வந்தே பாரத் உட்பட பல திட்டங்களை கொண்டு வந்து பல்வேறு வளர்ச்சிகளை காண்பித்த பிரதமர் மோடி நாட்டில் பிரிவினையை மட்டுமே பேசுகிறார் எனக் கூறி, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பிரசாரம் நடக்கிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்களுக்கான தேவையை செய்து தருவேன் என தொலைநோக்குப் பார்வையுடன் மோடி இருக்கிறார். இப்படி ஒரு பிரதமர்தான் நாட்டுக்கு தேவை. ஆனால், திமுக, காங்கிரஸ் என அனைவரும் இதனை தவறாக பேசுவது சரியில்லை. இதனை மக்கள் நன்கு புரிந்துக் கொண்டனர். முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை வந்துவிட்டது. இனி வருவது எல்லாம் போனஸ் தான். 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார்” என்றார்.