எழுத்தாளர் நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 2022-ல் தமிழ்நாடு அரசு அவருக்கு உ.வே.சா. விருது வழங்கிக் கெளரவித்தது.
எழுத்தாளர் நாறும்பூநாதன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில் 1960-ல் பிறந்தார். கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். அவருடைய தந்தை தமிழாசிரியர் என்பதால் தமிழ் மீதும் இலக்கியம் மீதும் இயல்பாகவே ஈடுபாடு கொண்டார்.
கனவில் உதிர்ந்த பூ, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன், இலை உதிர்வதைப்போல, யானைச்சொப்பனம், தட்டச்சுக்கால கனவுகள், ஒரு பாடல் ஒரு கதை, ஒரு தொழிற்சங்கப் போராளியின் டைரி குறிப்புகள், திருநெல்வேலி -நீர் நிலம் மனிதர்கள், பால்வண்ணம், வேணுவன மனிதர்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.
திருநெல்வேலியின் வரலாற்றுக் குறிப்புகளை தனது கண் முன்னே விரியும் கடலில் நூலில் எழுதினார். தமிழ் ஊடகங்களில் வரலாறு, இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார். எழுத்தாளராக மட்டுமல்லாமல் இலக்கியச் செயல்பாட்டாளராகவும் அவர் பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு அரசு முன்னெடுப்பில் திருநெல்வேலியில் ஒருங்கிணைக்கப்படும் பொருநை இலக்கியத் திருவிழா, நெல்லை புத்தகக் காட்சி போன்றவற்றில் நாறும்பூநாதனின் பங்கும் இருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகப் பணியாற்றினார்.