தமிழ்நாடு

தமிழக மாணவர்கள் இருமொழிக் கொள்கையையே விரும்புகின்றனர்: அமைச்சர் பொன்முடி

பிற மொழிகளைக் கூடுதலாகப் படிக்கலாம் தவறில்லை. ஆனால் கட்டாயமாக தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளைப் படிக்கவேண்டும்

ராம் அப்பண்ணசாமி

தமிழக மாணவர்கள் இருமொழிக்கொள்கையையே விரும்புகின்றனர். பிற மொழிகளை வேண்டுமானால் விருப்பத்தின் பெயரில் கூடுதலாகப் படிக்கலாம் என்று பேட்டியளித்துள்ளார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

செய்தியாளர்களுக்கு இன்று (செப்.12) அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி பின்வருமாறு:

`கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் உயர்வுக்குப் படி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் 12-ம் வகுப்பை முடித்துவிட்டு உயர்கல்விக்குச் செல்லாத மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கும், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கும், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஐடிஐகளில் சேர்வதற்கும் வழிவகை செய்யப்படுகிறது

நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்டு 1,31,706 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயருவதற்கு வாய்ப்பு உள்ளது. தனியார் ஒதுக்கீட்டின் கீழ் பல கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இருமொழிக்கொள்கை என்பது இன்று நேற்று வந்ததல்ல. தமிழகத்தில் 1967-ல் இருந்து இருமொழிக்கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் ஹிந்தி படிப்பில் மொத்தமே 3 மாணவர்கள்தான் பயில்கின்றனர். அதே போல மலையாளத்தில் 4 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். உருதுப் பாடப்படிப்பில் யாருமே சேரவில்லை.

இது மூலம் தமிழகத்தில் மாணவர்கள் எதை விரும்புகின்றனர் என்பது தெரியவருகிறது. அவர்கள் இருமொழிக்கொள்கையையே விரும்புகின்றனர். பிற மொழிகளைக் கூடுதலாகப் படிக்கலாம் தவறில்லை. ஆனால் கட்டாயமாக தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளைப் படிக்கவேண்டும். அதைத்தான் நாங்கள் அன்றிலிருந்து கூறி வருகிறோம்.

மூன்றாவது மொழியை விருப்பத்தின் பெயரில் மாணவர்கள் படிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இதற்காக ஒன்றிய அரசு நிதியை நிறுத்தினால் அது அரசியலுக்காக செய்யப்படுவதாகும், கல்வி வளர்ச்சிக்காக அல்ல. கல்வி வளர்ச்சிக்காக நாம் பாடுபட்டதால்தான் தமிழகம் இன்று கல்வியில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது' என்றார்.