தமிழ்நாடு

ஆண் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடக்கம்: மு.க. ஸ்டாலின்

கல்விதான் உங்களிடம் இருந்து திருட முடியாத சொத்து, ஆனால் அதைக் கூட நீட் தேர்வு என்ற பெயரில் திருடுகிறார்கள்.

ராம் அப்பண்ணசாமி

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த ஐம்பெரும் விழாவில் பங்கேற்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்த விழாவில், பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற 43 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டன. மேலும் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் 1,728 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

67-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற தமிழக மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதல்கள் வழங்கப்பட்டன. அரசுப் பள்ளிகளின் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்குக் கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டதுடன், அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் `காலை உணவுத் திட்டம்’, 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் `இல்லம் தேடிக் கல்வி’, 28 லட்சம் மாணவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி வரும் `நான் முதல்வன்’ திட்டம், 23 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் `எண்ணும் எழுத்தும் திட்டம்’, 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் `வாசிப்பு இயக்கம்’, `மாணவர் மனசு’, `நடமாடும் அறிவியல் ஆய்வகம்’, `வானவில் மன்றம்’, மாணவர்களை நல்வழிப்படுத்தும் `சிற்பி’ திட்டம், தகைசால் பள்ளிகள், பள்ளி செல்லா மாணவர்களைக் கண்டறிய செயலி, மாணவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் கல்விச் சுற்றுலா, 9 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு `வினாடி வினா’, எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைப் பட்டியலிட்டார்.

`மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் போல, வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் `தமிழ்ப் புதல்வன் திட்டம்’ செயல்படுத்தப்படும்’ என இந்த விழாவில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

விழாவில் மேலும் பேசிய முதல்வர், `பள்ளிக் குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் வண்ணமயமாக மாற்ற திறன்மிகு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது. அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தாலும் கல்வித்துறையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது’ என்றார்.

`கல்விதான் உங்களிடம் இருந்து திருட முடியாத சொத்து. ஆனால் அதைக் கூட நீட் என்ற பெயரில் திருடப்பட்டு வருகிறது. நீட் தேர்வு மோசடியானது என்று நாங்கள் முதலில் கூறினோம், இன்று இந்தியாவே அதைக் கூறுகிறது. கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக உங்களிடம் வரும் எனவே எதைப் பற்றியும் யோசிக்காமல் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்துங்கள், உங்கள் கனவுகள் மெய்ப்படட்டும்’ எனக்கூறித் தன் உரையை நிறைவு செய்தார் முதல்வர்.