கோப்புப்படம் 
தமிழ்நாடு

முன்பகை கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது: அமைச்சர் ரகுபதி

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் சொந்தக் காரணங்களுக்காகவும், முன்விரோதம் அடிப்படையிலும் நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

"தொடர் தோல்வியின் விரக்தியால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டதாகக் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். ஆனால், கலை மற்றும் அறிவுசார் மாநிலம்தான் தமிழ்நாடு என்பதை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். சமூக விரோதிகளைக் களையெடுக்கிற மாநிலம் தமிழ்நாடு என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்தாக வேண்டும்.

அவருடைய ஆட்சியில் நடந்த சம்பவங்கள் ஆட்சியோடு தொடர்புடையவை. இந்த ஆட்சியில் எந்த வன்முறை சம்பவங்களுக்கும் ஆட்சியோடு தொடர்பில்லை. கொடநாடு சம்பவத்தை எடுத்துக்கொண்டால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக இருந்துள்ளது. ஆனால், அங்கே தொடர் கொள்ளை, கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஆட்சியாளர்களின் திறமையின்மை அல்லது சதித் திட்டம் இருப்பதைக் காட்டுகிறது.

அன்றைக்கு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்கூட தனக்குத் தெரியாது, தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்றார். 13 உயிர்கள் பலியான சம்பவத்தைக்கூட முதல்வராக இருந்து தனக்குத் தெரியாது என்றுதான் கூறினார் எடப்பாடி பழனிசாமி, அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகுதான் தெரியும் என்றார்.

ஆனால், எங்களுடைய முதல்வர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக்கொள்ளக்கூடியவர். தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாள்களில் கொலைகள் நடந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி 5 கொலைச் சம்பவங்களைக் கூறுகிறார். அதில் ஒன்று புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. இதையும் தமிழ்நாட்டு கணக்கில் சேர்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

மீதமுள்ள 4 வன்முறைச் சம்பவத்தில் அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இவையனைத்தும் சொந்தக் காரணத்துக்காகவும், முன்விரோத அடிப்படையில், பகைமை அடிப்படையில் நடந்துள்ளன. சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் அளவுக்கு எந்தச் சம்பவங்களும் நடக்கவில்லை.

4 கோடி மக்களுக்குத் தலைவர் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியைச் சொல்வோம். இன்று 8 கோடி மக்களுக்குத் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். எனவே, மக்கள்தொகை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை கூடவும் செய்யும், குறையவும் செய்யும்.

ஆனால், இதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது. நாங்கள் பொறுப்பாக இருந்தால், எங்கள் மீது குற்றம்சாட்டலாம்.

யார், யாருக்கெல்லாம் முன்விரோதம் இருக்கிறது என்று கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறோம். ரௌடிகள் பட்டியலில் உள்ள ரௌடிகளிடம் உள்நோக்கம் இருக்கிறதா, முன்விரோதம் இருக்கிறதா, முன்பகை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அவை தீர்த்துவைக்கப்பட வேண்டும், இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்று முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கக்கூடியவராக முதல்வர் இருக்கிறார்.

சட்டம்-ஒழுங்கை சிறப்பாகப் பேணி பாதுகாப்பதால்தான், இந்தியாவில் முதன்மையான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அனைத்துத் தொழிலதிபர்களும் நம்மை நாடி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி போன்றோர் இதை வேறு கோணத்துக்கு மாற்றிவிட்டு, தமிழகத்தைப் பின்நோக்கி தள்ளிவிட முடியுமா என்று கனவு காண்கிறார்கள். அவர்களுடையக் கனவு ஒருபோதும் பலிக்காது.

தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே சிறந்த அமைதிப் பூங்கா என்பதை முதல்வர் ஸ்டாலின் நிலைநிறுத்துவார்" என்றார் அமைச்சர் ரகுபதி.

முன்னதாக, தமிழ்நாட்டில் தினந்தோறும் கொலை நடந்து வருவதாகவும், கொலை மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.