ஆளுநர் ஆர்என் ரவி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதமா?: ஆளுநர் மாளிகை விளக்கம் | RN Ravi |

அக்டோபர் 31, 2025 வரை 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

கிழக்கு நியூஸ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் இருப்பதாக இருப்பதாக உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, அக்டோபர் 31, 2025 வரை 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இவற்றில் 95 சதவீத மசோதாக்களை மூன்று மாதங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"13 சதவீத மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 60 சதவீத மசோதாக்கள் மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மற்ற மசோதாக்கள் அக்டோபர் கடைசி வாரத்தில் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை பரிசீலனையில் உள்ளன. அக்டோபர் கடைசி வாரத்தில் மொத்தம் 8 மசோதாக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18, 2021 முதல் அக்டோபர் 31, 2025 வரை மொத்தம் 211 மசோதாக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மொத்தம் 170 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. 73 மசோதாக்களுக்கு ஒரு வார காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. 61 மசோதாக்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. 27 மசோதாக்களுக்கு மூன்று மாத காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களின் எண்ணிக்கை 27. மாநில அரசின் கோரிக்கைக்கு இணங்க குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களின் எண்ணிக்கை 16.

மொத்தம் 4 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மாநில அரசால் திரும்பப் பெறப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை 2.

மேலும், சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள், சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை சார்பில் கூடுதலாகத் தெரிவிக்கப்பட்டது:

"10 மசோதாக்கள் ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டன. இந்த முடிவு குறித்து மாநில அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) ஒழுங்குமுறைகளுடன் முரண்படுவதால், குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஆளுநர் எல்லா மசோதாவையும் ஆராய்ந்து உரிய கவனத்துடன் சட்டத்தையும் மக்கள் நலனையும் நிலைநாட்டுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Rajbhavan clarifies that allegations of delay in Bill assent are factually incorrect

RN Ravi | Governor RN Ravi | Rajbhavan |