ANI
தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை (மார்ச் 3) பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடக்கம்!

பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்கள், புகார்கள் போன்றவற்றை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறையின் `14417’ எண் மூலம் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

ராம் அப்பண்ணசாமி

தமிழகத்தில் நாளை (மார்ச் 3) பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் 3,316 மையங்களில் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 2024-25 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை (மார்ச் 3) தொடங்கி, மார்ச் 25 வரை மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நாளை நடைபெறுகிறது.

பொதுத் தேர்வுகளுக்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வில் ஆள் மாறாட்டம், துண்டுத்தாள்கள் அல்லது பிற மாணவர்களைப் பார்த்து எழுதுவது, விடைத்தாள்களை மாற்றம் செய்வது, தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடப்பது போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுத் தேர்வுகள் குறித்த சந்தேகங்கள், புகார்கள் போன்றவற்றை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறையின் `14417’ எண் மூலம் இலவச உதவி மையத்தை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகுதியான மாற்றுத் திறனாளிகள் மற்றும் விபத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் நேரம் போன்ற சலுகைகள் வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.